நன்றி! மீண்டும் வருக!!
இந்த வலைத்தளப் பதிவுகளை தினம் வந்து படித்து என்னை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். மனதில் இருந்த சில கதைகள சந்தோஷமாகச் சொன்னேன். இலக்கணத்தை, ஒரு பெரிய தமிழ் கூட்டத்தில் பேசணும்ன்னு எனக்குள்ள இருந்த தவிப்பு ஒரளவுக்குத் தணிந்தது. மேலும் எனக்குள்ளிருந்த கேள்விகளையும் கேட்டாச்சு. பதில எப்பொழுது தெரிந்தாலும் சொல்ல வேண்டுகிறேன். எல்லாவற்றுக்கும் மேல, இங்க பல நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிச்சயம் உங்கள் வலைத்தளங்களுக்கு வந்து நல்லவற்றைக் கற்று, நம் நட்பை வளர்க்க முயல்வேன். இன்னும் நம்ம நிறைய பேசுவோம்..
மேலும், இங்கு திருப்பாவையைத் தொடர உள்ளேன். அதன் பிறகு, தினம் ஒரு பதிவு இடாவிட்டாலும், அப்பபோ பதிவு செய்யறேன்...வாங்க!! திருப்பாவை வேண்டாமா!! குட்டிப்பிரியா வுக்கு வாங்க..வெட்டிக் கதை பேசலாம். அதுவும் வேண்டாமா. ஆன்மீகப் பகுதிக்கு வாங்க!! அங்க பார்க்கலாம்.
வரப்போகும் 'தை' மாதம் உங்களுக்கு எல்லா நன்மையையும் தரட்டும்!!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!
நன்றி! மீண்டும் வருக!!
அன்புடன்,
ப்ரியா (எ) செண்பக லட்சுமி
நட்பும் நிறைவும், யாப்பும் அணியும் மற்றும் மின் அகராதி !!
நட்சத்திர வாரத்தின் கடைசி நாள்!! இவ்வளவு தமிழ் ஆர்வம் உள்ள மக்கள இங்க சந்திப்பேன்னு நான் எதிர்ப்பார்க்கல..இந்த வாரம், மனசுல ஒரு தனி நிறைவு தான் போங்க!! நிறைவுன்னா எனக்கு நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் தான்.
சும்மா கதை ஒண்ணு கேளுங்க!!
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் மானசீக தோழர்கள். ஒருத்தர பற்றி இன்னொருத்தர் கேள்விப்பட்டு ஒரு நட்பை மனசுல வளத்துகிட்டவங்க. ஒருத்தரோட பேர இன்னொருத்தரும் சேர்த்து எழுதும் அளவுக்கு அன்பு வளர்ந்தது.. உறையூரில் உள்ள கோப்பெருஞ்சோழனுக்கும் அவன் மகன்களுக்கும் சண்டை வந்ததால, சான்றோர்களின் அறிவுரையின் பேரால், நாட்டை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர்விட எண்ணினான் சோழன். ஆனால், மானசீகமா, அதற்குள்ள பிசிராந்தையார் தன்னைப் பார்க்க வருவார்ன்னு நம்பினான்.
ஏதோ உள்ளுணர்வால, பிசிராந்தையாரும் உறையூருக்கு சோழன பார்க்க நடந்தார். 'தலை நரைக்கும் வயதாகியும் உங்களுக்கு நரைக்க வில்லையே'ன்னு உறையூர் மக்கள் கேட்டதற்கு (புறநானூறுல இருக்கு) அவர் சொன்ன பதில் இது.
"ஆண்டு பலவாகியும் என்னிடம் நரையில்லையே எனறு கேட்டால், அதற்குக் காரணம், முதலில், என் மனைவி மிக மாண்பு/சிறப்பு மற்றும் பொறுமை நிறைந்தவளாக இருக்கிறாள். அத்துடன் பிள்ளைகளும் அப்படியே அமைந்துள்ளனர். என் சேவகர்களோ எனக்கு என்ன வேண்டும் என்றறிந்து உதவி செய்பவர்கள். மன்னனோ மக்கள் மீது அன்புடையவன். அவனால் வழி நடத்தப்படும் பொறுப்பு மிக்கவர்களாய் இளைஞர்கள் உள்ளார்கள். இத்தகைய மனிதர்களுக்கிடையில் வாழும் வாய்ப்பைப் பெற்றதால் எனக்கு வயது கூடிய பிறகும் தலை நரைக்கவில்லை" என்றார் பிசிராந்தையார். இதோட பாட்டு
"யாண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழும் ஊரே"
மேலும் அவர் கோப்பெருஞ்சோழன் இருந்த இடத்தை அடைந்ததும், அவன் வடக்கு நோக்கி உயிர் நீத்தான் என்று கேள்விப்பட்டார். அதனால் தானும் வடக்கு நோக்கி விரதம் இருந்து உயிர் நீத்தாராம். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! வழக்கம் போல எங்க வீட்டு பெரியவங்க இந்த பாட்ட சொல்லி ' நீங்க எல்லாம் இப்படி சொல்லும்படியாவா நடக்கறீங்க. எங்க தலை நரைப்பதே உங்களால தான்' ன்னு திட்டுவாங்க..ஹீ ஹீ
இந்தக்கதையில, நரையில்லாம இருப்பது எப்படி?, தன்னை விட சிறந்த மனைவி கிடைச்சா அத ஒத்துக்க மனம் வருமா?, உள்ளுணர்வு சக்தி என்றொண்டு உண்டு!! மற்றும் நட்புக்கு இலக்கணம் இவர்கள் -இப்படியெல்லாம் கருத்துக்கள் எடுத்துக்கலாம்.ஆனால், அவர் பதிலுல உள்ள 'அந்த நிறைவு/பெருமை' எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க.. நீ எப்படி இருக்கன்னு கேட்டா, அப்ப எந்த பெரிய தொல்லை இல்லையென்றாலும், இந்த காலத்துல யாராவது ' நல்லா இருக்கேன்'/சௌக்கியம்'- இப்படியெல்லாம் சொல்லறாங்களா.!! ஏதோ இருக்கேன் - இதுதான் அதிகபட்ச நிறைவா இருக்கு..யாருக்குத் தான் ப்ரச்சனை இல்ல..ஆனா, அப்பப்போவாவது, அந்த நிறைவு மனசுக்கு வர நாம எல்லாம் பழகிக் கொள்ளணுங்க..
சரி, இலக்கணத்துக்குப் போவோமா!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 7
31. யாப்பு இலக்கணம்: யாப்பு என்பது பாட்டு. பாட்டுக்குறிய இலக்கணம் யாப்பிலக்கணம். யாப்பு என்றால் கட்டுதல்ன்னு பொருள். யாக்கை-உடம்பு- கட்டுதல். அதாவது நம்ம உடம்பு ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை,அடி,தொடை என்பவையால தமிழ்ப் பாட்டு புலவர்களால் கட்டப்பட்டுள்ளது. இவைகளை வைத்து 4 பா வகையுள்ளது.1. வெண்பா 2.ஆசிரியப்பா 3. கலிப்பா 4. வஞ்சிப்பா
இதைப் பத்தி படிக்க நிறைய நேரம் தேவை. அதனால நம்ம சான்ற மட்டும் பார்ப்போம்.
1. வெண்பா: மூதுரை, நல்வழி, திருகுறள்,நாலடியார், நள்வெண்பா-இவையெல்லாம் வெண்பா வகை
2. ஆசிரியப்பா: சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
3. கலிப்பா: இது துள்ளல் ஓசையோடு வரும் சா: தக்கயாப்பரணி, பெரியபுராணம்.
4. வஞ்சிப்பா: பட்டினப்பாலை. வேறு சான்றுகள் கிடைத்தால் சொல்லுங்க!!
32. அணி இலக்கணம் பார்ப்போமா!!
செய்யுள் அழகாக அமைய, எழுத்தாலும் பொருளாலும் அழகு சேர்ப்பது அணி இலக்கணம். இதுல சிலவற்றைப் பார்ப்போம்
1. உவமை அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறையாம வருவது உவமை அணி.
சா: "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று "
உவமேயம்: அன்பு இல்லாத வாழ்க்கை சிறக்காது
உவமானம்: பாலையிலுள்ள காய்ந்த மரம் தளிர்விடாது
அற்று(போன்ற) என்ற சொல் மறையாம வருது
2. எடுத்துக்காட்டு அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு அணி.
சா: "தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
உவமானம்: மணல் கிணறு தோண்டிய அளவு நீர் சுரக்கும்
உவமேயம்: மக்களுக்கு தான் கற்றதற்கேற்ப அறிவு வரும்
இங்கே போல என்பது மறைந்து வருது பாருங்க!!
3. வேற்றுமை அணி: ஏதோ ஒற்றுமை உள்ள ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி.
நம்ம டீ.ஆர் அடிக்கடி இத உபயோகபடுத்தறாரு பாருங்க:)-
சா: "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
புண் இங்க ஒற்றுமை. ஆனால் நாவினால் சொன்ன சுடுசொல்லோட புண் ஆறாது என்பது வேற்றுமை.
4. ஏகதேச உருவக அணி: ஒரு பொருளை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்
சா: "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்".
இங்க, பிறவியை கடலாக உருவகப் படுத்தியிருக்கார். ஆனால், 'இறைவனடி சேராதவ'ர உருவகப் படுத்த வில்லையே!!
5. தற்குறிப்பேற்ற அணி: இயல்பா நடக்கும் ஒன்றை அழகா ஒரு குறிப்போடு இணைத்துச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி
சா:"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
6. வஞ்சப்புகழ்ச்சி அணி: புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்
சா: "புகழ்வது போல் இகழ்தல் தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான"
கயவர்கள் தம் மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள். கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
முற்றும். (மக்களே!! ஒரு வழியா இலக்கணம் முடிந்தது!! )
தெரிந்தால் சொல்லுங்களேன் - 7
உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் மின்அகராதி இணையங்கள எனக்குச் சொல்லுங்களேன். நான் கண்ட ஒன்று இங்கே!!
பாரதி சின்னப்பயல்,பொருளிலக்கணம் மற்றும் அமெரிக்காவில் நாடகம்
என்ன.. புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றி எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டதுல மலைச்சு போயிட்டீங்களா? புதுக்கவிதைன்னா பாரதியார் தான் நினைவுக்கு வராரு. பாரதியார் எவ்வளோ புத்திசாலி தெரியுமா?
சும்மா கதை கேளுங்க!!
ஒரு சமயம் பாரதியாரோட நண்பர் காந்திமதிநாதன், பாரதியாருக்கு கிடைக்கும் புகழ், பாரட்டைப் பார்த்து கொஞ்சம் அசிகைப்பட்டார். அதனால, அவரிடம் போய் 'பாரதி சின்னப்பயல்'ன்னு ஈற்றடியாக வைத்து ஒரு பாட்டு சொல்லுன்னு கேட்டார். உடனே பாரதியார் ஒரு பாட்டைப் பாடி, கடைசியில் 'காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப்பயல்'ன்னு முடிச்சு அவர் மூக்கை உடைச்சாராம். என்ன கூர்மையான புத்தி பாருங்க..நம்ம மக்கள் சிலரும் அது போல கூர்மையா யொசிக்கிறவங்க தான்!! எங்க குடும்பத்தோழர் ஒருத்தர் எங்க கிட்ட வந்து 'திருப்பாவை எல்லாம் ஏன் படிக்கறீங்க? அது அத்தனையும் தப்பாம். ஆண்டாளே சொல்லிட்டாங்க' னார்.. தூக்கி வாரி போட்டு எங்க பாட்டியும் 'அது எங்க சொன்னாள்ன்னு' கேக்க கடைசி பாட்ட காட்டராரு..
"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்."
திருப்பாவையை தவறாம சொல்லுன்னு சொல்றாங்க..இவர என்னங்க சொல்றது :)-
அது கிடக்கட்டும் மக்களே.. மறுமொழியிட்ட மக்கள் மற்றும் அவர்கள் கொடுத்த வலைத்தளங்களுக்குப் போய் நிறைய படிக்கணும், தமிழ் எழுத்தாளர்கள தெரிஞ்சுக்கணும், அவர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா, எதிர்பாரதவிதமாக, எனக்கு கல்லூரியில இந்த வாரம் வேலை ரொம்ப அதிகம். காலையில தான் வீட்டுக்கே வர முடிஞ்சது..இதுக்கு நடுவுல பதிவுகள் வேற எழுத வேண்டியிருக்கு..அதுனால பதில் மறுமொழி கூட இடமுடியல. இன்னும் ரெண்டு, மூணு நாளுல எல்லாருக்கும் பதில் போடறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்க!!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 6
சொல்லிலக்கணத்தில கொஞ்சம் மீதம் இருக்கே!!
23. இலக்கியப்படி சொல்ல 4 வகையா பிரிக்கலாம்.
1. இயற்சொல் : எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த தமிழ் சொற்களை இயற்சொல் என்று கூறுவர். சா: மண், நடந்தான்
2. திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கும் சொற்களை திரிசொல் என்பர் சா:கிள்ளை (கிளி); வேழம் (யானை)
3. திசைச்சொல்:தமிழ்நாட்டிற்கு அப்பால் பல திசைகளிலிருந்து வந்து தமிழுடன் கலந்த சொற்களை திசைச்சொல் எனபர் சா: செப்பு, சாவி, பண்டிகை, கஜானா
4. வடசொல்: சமிஸ்கிருத மொழியில் இருந்து தமிழில் வந்து கலந்த சொற்கள் வடசொல் எனப்படும். சா: ஜலம், நமஸ்காரம்.
அவ்ளோ தான் 'சொல் இலக்கணம்'. பொருளிலக்கணத்திற்கு போவோமா!!
இது சொற்கள் சேரும் விதம், வாக்கியம் அமைப்பதின் விதி, அமைப்பு போன்றவற்றைப் பற்றிச் சொல்வது. இந்த 'junoon' தமிழ் ஏன் நமக்கு வித்தியாசமா படுது?!! இந்த பகுதியில விதித்த விதிகளால தான்!!
இதுல உள்ள எல்லா விதிகளையும் பற்றி பேசுவது கடினம் தான். நல்லா தெரிஞ்சுக்க இங்க பாருங்க (பக்கம் 176 முதல்). நம்ம சிலவற்றை மட்டும் பார்ப்போம்!!
24.தொகைன்னா என்னன்னு பார்போம்!!
இரண்டு சொற்களுக்கிடையே வரவேண்டிய உருபு மறைந்து வந்தும் அந்த பொருளைத் தந்தால் அதுக்கு பேரு தொகை. அப்படி வந்த 'தொடரான சொற்களுக்குப்' பேர் தொகை நிலைத் தொடர்.
சா: பாடல் பாடினான் (பாடல் என்பது பாடலைக் குறிக்குது)
இத 5 வகையா பிரிக்கலாம்.
1. வேற்றுமைத் தொகை (ஐ, ஆல், கு, இன், அது, கண்) சா: பாடல் பாடினான்
2. வினைத்தொகை சா: பாய்புலி (பாய்கினற/ பாயும்/பாய்ந்த் புலி)
3. பண்புத்தொகை சா: செம்மண் (செம்மையான மண்)
4. உவமைத்தொகை சா: பவள வாய் (பவளம் போனற வாய்)
5. உம்மைத்தொகை சா: ஐந்தரை கிலோ (ஐந்தும் அரையும்- உம் மறைந்து வருகிறது)
6. அன்மொழித்தொகை: மேலுள்ள 5 தொகைகளுடன் இடைச்சொல் அல்லாத சில சொற்கள் மறைந்து வந்தால் அது அன்மொழித் தொகை சா: மலர்விழி வந்தாள். மலர்விழி - 'மலர்போன்ற விழி' ய பார்த்தா அது பண்புத்தொகை. பின்னாடி வர 'வந்தாள்' என்ற வினைமுற்றால் அது ஒரு பெண்ணைக் குறிக்கும். இது அன்மொழித் தொகை.
25. தொகாநிலைத்தொடர்ன்னு ஒண்ணு இருக்கு.
இந்த இடைச்சொற்கள் தொகாம முழுசா வந்தா தொகா நிலைத்தொடர். சா: பாண்டியன் வந்தான்.
26. வழு- அப்படீன்னா என்ன?
இலக்கணத்தில் குற்றமுடையதாக வரும் சொல் வழு சா: கண்ணகி வந்தான்
27. வழுவமைதின்னா என்ன?
அப்படி இருக்கும் வழு சில சமயம் அந்த இடத்தில உள்ள பொருளுக்காக ஏற்று கொள்ளப்பட்டால் வழுவமைதி சா: 'அம்மையே! அப்பா, ஒப்பிலா மணியே!!' - இங்க தாய் போல இரக்கம் உள்ளதால சிவன் 'அம்மையே'ன்னு சொல்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
28. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவின்னா என்னென்ன?
விரைவு, வெகுளி,அச்சம், உவகை - இத சொல்ல ஒரே சொல் அடுக்கடுக்கா வந்தா அடுக்குத்தொடர் சா: ஓடு ஓடு ஓடு. மேலும், இத பிரிச்சா சொல்லுக்கு பொருள் இருக்கும்.
இரண்டு இரண்டா ஒலிக்குறிப்புச் சொற்களா வந்து, சொற்கள பிரிச்சா பொருளில்லாம வந்தா இரட்டைக்கிளவி சா: கல கல
29. மரபுன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா - எப்பொருளை எச்சொல்லால் நம் முன்னோர்கள் வழங்கினார்களோ அப்படியே சொல்வது மரபு சா: யானைப்பாகன், கீரிபிள்ளை, பசுங்கன்று
30. புணர்ச்சி - அப்படின்னா? அதன் வகைகள் என்னென்ன?
நிலைமொழி ஈறும் வருமொழியும் சேருவது புணர்ச்சி. சொல் வகையா இது 2 வகை.
நிலைமொழி ஈறும் வருமொழியும் சேரும் போது இயல்பா வந்தா இயல்பு புணர்ச்சி சா: மலை+நாடு= மலைநாடு.
ஏதாவது மாற்றம் வந்தால் அது விகாரப் புணர்ச்சி. இதுல எழுத்துக்கள் தோன்றலாம், திரியலாம், மறஞ்சும் போகலாம் சா : வெற்றிலை+ கடை-வெற்றிலைக்கடை
இது தவிர வாக்கியம் அமைப்பதில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எப்படி வரணும்ன்னு நிறைய விதிகள் இருக்கு..நீங்க மேல உள்ள தளத்துக்கு சென்று படிச்சு பாருங்க. நம்ம இதோட பொருளிலக்கணத்த முடிச்சுக்குவோம்!
தெரிந்தால் சொல்லுங்களேன் -6
1. அமெரிக்காவில் நிறைய தமிழ் சங்கங்கள்/மன்றங்கள் இருக்கு. அவை என்னென்ன எங்கெங்கன்னு ஒரு பட்டியல் கிடைக்குமா?
2. அதுல, மேடைநாடகம் நடத்தும் சங்கங்கள் எந்த ஊர்களுல இருக்குன்னு சொல்லமுடியுமா?? நமக்கு கொஞ்சம் நாடகத்துல நடிக்க ஆசை.. ஹீ ஹீ..சான்ஸு தேடத் தான் கேக்கறேன்!!
THURSDAY, JANUARY 10, 2008
தொறடு போடாதே, எழுத்திலக்கணம் மற்றும் மரபுக்கவிதைப் பயிற்சி!
அதுக்குப்பின்னாடியும் ஒரு கதை இருக்கு தெரியுமா!ஆரம்பிச்சுட்டாய்யா.. கதை சொல்லறேன்று வந்துடுவா :)- இப்படி சலிச்சுகிட்டே படிக்காதீங்க. மக்களே!! 'கும்'முன்னு, நல்லா நிமிர்ந்து உட்கார்ந்து.. ஒரு காபிய கையில எடுத்துட்டு.. வந்து உற்சாகமா கேளுங்க?! அடுத்த வாரத்துலேயிருந்து யாரு உங்களுக்கு தினமும் சரித்திரக் கதை சொல்லப்போறாங்க?!! (அப்பாடி..நல்ல வேளை..ஒரு வாரம்தான்னு நினைக்கறீங்களா!!ஹீ..ஹீ.. என் தளங்கள்ல அப்பப்போ சொல்வேன்..)
சும்மா ஒரு கதை கேளுங்க!!
தமிழில் மகாபாரதம் எழுதிய வில்லிபுத்தூரார் தன் அகந்தைச்செருக்கால மத்தவங்கள மதிக்கத் தவறினார். அதனால மத்த சிறந்த தமிழறிஞர்களை வாதத்துக்கு கூப்பிடுவார். கூப்பிடும் போதே ஒரு 'கண்சிஷன்' போட்டுடுவார். இந்த காய் பறிக்கும் தொறடு இருக்குல.. அத எடுத்து எதிராளியோட காதுல மாட்டி வெச்சேதான் வாதத்துக்கு கூப்பிடுவாராம். எதிராளி தோத்தவுடனே தொறட புடிச்சு இழுத்து அவர் காதை அறுப்பாராம். என்ன கொடுமை சரவணன் இது :)-
ஆனா பாருங்க!! 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு'ன்ற மாதிரி ('பாபா' ரஜினி ஸ்டைலுல) வந்தாரு நம்ம அருணகிரிநாதர். இவர் 'கந்தர் அந்தாதி' சொல்ல சொல்ல வில்லிபுத்துரார் பொருள் எழுதணும்..இது தான் போட்டி. 54 வது பாட்டுக்கு வரும்போது வில்லிபுத்தூராருக்கு அர்த்தம் புரியல. அதனால அவர் தோத்து போனார். ஆனா, அருணகிரிநாதர் அதற்காக இவர் காத அறுக்காம, இனிமேல் மற்றவர் காதுகளை அறுக்கக் கூடாதுன்னு கேட்டுக் கொண்டாராம். அந்த பாட்டஇங்க அழகா போட்டிருக்காங்க (right click செய்து) பாருங்க!! தலைநகரம் படத்துல வடிவேல் சொல்லற மாதிரி(இது தான் அழகுல மயங்கி விழுறதா:)-) இது தான் 'தொறடு போட்டு சண்டைக்கு இழுக்கறதா' ?? ன்னு யோசிககறீங்களா!! ஹீ..ஹீ
சரி, இலக்கணம்.. இலக்கணம்..டிங்..டிங்..டிங்..நாம் 7 நாளுல முடிக்கணுமே.. வாங்க போகலாம்!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 5
சொல்லிலக்கணம்: இது தாங்க நிறைய இருக்கு..வினை, வேற்றுமை, எல்லாம் பார்த்தோமா!! 23.ஆகுபெயர்ன்னா என்னன்னு பார்ப்போம்.
"உலகம் உருண்டை" "உலகம் சிரிக்கும்"
இதுல முதல்ல 'உலகம்' உண்மையாவே உலகத்தை தான் குறிச்சுது.
ஆனா அடுத்துல 'உலகம் என்னவோ உலகத்துல உள்ள மக்களைக் குறிச்சுது. இது தான் ஆகுபெயர் (Transferred noun).
ஒரு சொல் அதனோடு தொடர்பு கொள்ளாமல், வேறொரு பொருளுக்கு தொடர்பு கொண்டால் அது ஆகுபெயர். இது 6 வகைப்படும்.
1. பொருள் ஆகுபெயர் சா: தாமரை முகம் (பெண்ணைக் குறிப்பது)
2. இட ஆகுபெயர் சா: மதுரை திரண்டது (மக்களைக் குறிப்பது)
3. கால ஆகுபெயர் சா: கார் அறுத்தான் (நெல்லைக் குறிப்பது)
4. சினை ஆகுபெயர் சா: வெற்றிலை நட்டான் (வெற்றிலைக் கொடியைக் குறிக்கிறது)
5. குண ஆகுபெயர் சா: வெள்ளை அடித்தான் (வெள்ளைச் சுண்ணாம்பைக் குறிக்கிறது)
6. தொழில் ஆகுபெயர் சா: வற்றல் உண்டான் (வற்ற வைத்த வடகத்தைக் குறிக்கிறது)
பெயர்ச்சொல், வினைச்சொல் வகையெல்லாம் பார்த்தோம். இடைச்சொல்ல பார்ப்போமா!! 24. இடைச்சொல்-அதன் வகைகள்: இது தாங்க மனப்பாடம் பண்ண நான் கஷ்டப்பட்ட பகுதி. பிடிக்கலன்னாலும் பேசித்தானே ஆகணும்.. எவை எல்லாம் இடைச்சொல்லா வரும்? பார்ப்போம். பெயருக்கும் வினைக்கும் இடைப்பட்டு வருவது இடைச்சொல்.
1. வேற்றுமை உருபுகள் (Cases): ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி- இத நம்ம பார்த்துட்டோம். சும்மா ஒரு சான்று: ராமனுக்கு வலித்தது
2. விகுதி (Endings) அன், ஆன், அல், தல், வை. சா: வா+த்(ந்)+த்+அன்+அன் -வந்தனன்.
3.சாரியை: அன், ஆன், அத்து, அம். சா: வந்தனன் (வா+த்(ந்)+த்+அன்+அன்)
4. உவமை உருபுகள் -உவமைக்காக உபயோகப்படுத்தப் படும் உருபுகள்: போன்ற, புரைய, மான, அன்ன, ஒத்த. சா: மயிலொத்த பெண்
5. ஏ, ஓ - விளி. சா:கடவுளே, அவனோ
6. ஒடு, தெய் என்ற இசை நிறைப்பதற்காக வருவன. சா:அதனொடு
7. மற்று, கொல், அம்ம - அசை நிறைகள்.
8.ஒலி, அச்சம், நிறைவு - இவற்றை குறிப்பால் உணர்த்துவன.
அப்பாடா.. முடிஞ்சு போச்சு.. சரி, உரிச்சொல்ல பார்ப்போம் 25. உரிச்சொல் - பெயர், வினைகளின் குணத்தைக் குறிப்பது உரிச்சொல். இது ரெண்டு வகைங்க.
1. ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்: பல சொற்கள் ஒரே பொருளைத் தரும் சா: களபம்,வேழம்,மாதங்கம், கைம்மா, கம்பமா,களிறு - எல்லாம் யானையைக் குறிக்கும்
2. பல குணம் தழுவிய ஒரு உரிச்சொல்: ஒரே சொல் பல பொருளைத் தரும் சா: வேழம்-யானை/கரும்பு என்று இரண்டையும் குறிக்கும்; கடி-கூர்மை, மணம, அச்சம் என்று பல பொருளைக் குறிக்கும்.
அதெல்லாம் சரி, நம்ம ஒரு சொல்ல பிரிச்சா என்னென்ன இருக்குன்னே பார்க்கலயே !!
26. பதம் என்றால் என்னங்க?
ஒரு எழுத்து தனித்தோ இல்லை மற்ற எழுத்தோடு சேர்ந்தோ பொருள் தந்தால் அதுக்குப் பேர் பதம். அது 2 வகை - 1. பகுபதம் 2. பகாபதம்.பகுபதம்: எழுத்த பிரிச்ச பிறகும் பொருள் இருந்தா பகுபதம் சா:படித்தவன் . இதை பிரிச்சா 'படி'ன்னு ஒரு பொருளுள்ள வார்த்தை இருக்கு
பகாபதம்: பொருள் இல்லைன்னா அது பகாபதம் சா: கல், மண்.
27. பகுபதத்துல என்னென்ன இருக்குங்க?
ஒரு சான்றோட பார்ப்போம் சா: வந்தான்=வா+ த்(ந்)+த்+அன்
வா - பகுதி (முதலில் வரும்) ; அன் - விகுதி (கடைசியில் வரும்)
த் - இடைநிலை(இடையில் வரும்)
த் - சந்தி (இது பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சில சமயம் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில வரும்). இங்க, ' த்' ஆக மாறி இருக்கு-இது சந்தி விகாரம்.. இதப்பத்தி கவலைப்படாதீங்க.. அப்புறம் பாத்துகலாம்.
28. சாரியை அப்ப்டின்னு ஒண்ணு சில சமயம் வருமே அது என்ன??இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவது. சா: வந்தனன் வா+த்+த் +அன்+ அன். எதெல்லாம் சாரியயையாக வரும் அன்,ஆன், இன்,அல், அத்து, அற்று, அம்
29. விகாரம்ன்னா என்ன? 'வா'எனபது 'வ'வாக மாறி இருப்பது விகாரம். 'ந்' என்பது 'த்' ஆக மாறி இருப்பது சந்தி விகாரம். இத அப்புறம் பார்ப்போம்.
30. இடைநிலைனு ஒண்ண பார்த்தோமே! அது என்ன?
தமிழை, தமிழ் பேசாத மக்களுக்குச் சொல்லைத்தர முயலும் போது தாங்க இதோட அருமை தெரியுது.. ஏன் தெரியுமா.. Lexingtonla ஒரு குழந்தை வந்து என்ன கேட்டுச்சு..."எதிரகாலம் காட்டும் போது, 'உண்+ப்+ஆன் - உண்பான்'ல 'ப்'' வருது...ஆனா, போ+வ்+ஆன்- போவான்ல 'வ்' வருதே!! ஏன்??". உண்மையா, அப்போ எனக்கு இடைநிலையோட விதிகள் ஞாபகமே இல்ல.. அது அப்படித்தான்னு சொல்லணும் போல வந்தது.. அப்புறம் புத்தகத்தில தேடினா, இடைநிலை காலத்திற்கேற்ப எப்படி மாறும்ன்னு படிச்சு ஞாபகப் படுத்திகிட்டேன்.. அந்த விதி என்னன்னு பார்ப்போம்!!
இறந்த கால இடைநிலை: த், ட், ற், இன்
சா: செய்+ த்+ஆன் - செய்தான்;
உண்+ட்+ஆன் - உண்டான்;
தின்+ற்+ ஆன் - தின்றான்;
உறங்கு+ இன்+ஆன் - உறங்கினான்
நிகழ் கால இடைநிலை: கிறு, கின்று, ஆநின்று (இதெல்லாம் நம்ம மனப்பாடம் பண்ணி இருக்கோம். ஞாபகம் இருக்கா)
சா: நட+கிறு +ஆன் - நடக்கிறான்;
நட+கின்று+ஆன் - நடக்கின்றான்;
நட+ஆநின்று+ ஆன் - நடவாநின்றான்
எதிர்கால இடைநிலை: ப், வ்
சா: உண்+ப்+ஆன் - உண்பான்.
போ+வ்+ ஆன் - போவான்.
ஒரு வழியா சொல் இலக்கணத்த முடிக்கப் போறோம்முங்க. இன்னும் கொஞ்சம் நாளைக்குப் பார்க்கலாம்.
தெரிந்தால் சொல்லுங்களேன் - 5
உங்களயும் என்னைப் போன்ற சாதாரணமானவராக நினைத்துக் கேட்கும் கேள்வி இது !! அறிஞராக நீங்கள் இருந்தாலும் பதில் சொல்லுங்க!!
இத சொல்லுங்க!! நம்ம விழுந்து விழுந்து மனப்பாடம் பண்ணி ஒரு இலக்கணம் படிக்கறோம். ஆனா, அதெல்லாம் கவிதையோ, இலக்கியமோ எழுதப்போத மாட்டேங்குது.. பல்வேறு துறைக்கு நம்மளே நம்மள தத்து கொடுத்துடறோம்.. நீ மட்டும் என்னனு கேக்காதீங்க..நானும் தான்..ஆனா உணர்ச்சிகளை கவிதையா பார்க்கிற ஆசை இருப்பதால நமக்குள்ள சில பேர் ஆர்வத்தோட கவிதை எழுதறோம்..அதாங்க..புதுக்கவிதை...வரிய மடிச்சு மடிச்சு எழுதறோம்.. நான் புதுக்க்கவிதைக்கு எதிர்ப்பு சொல்பவள் இல்ல.. ஆங்கிலத்தில சொன்னா 'I am thinking aloud'-மனம் விட்டு பேசறேன்...கேள்விக்கு வரேன் இருங்க..
நம்ம எல்லாம் மரபுக் கவிதை எழுதத் தெரிஞ்ச பிறகு, பாமர மக்களுக்காக பாரதியார், பாரதிதாசன் மாதிரி 'புதுக்கவிதை' எழுதறவங்க இல்ல.. ஒத்துகறீங்களா!! கேள்விகள் என்னன்னா..
1. இப்படி நமக்கு சுலபமாக்கப்பட்ட (புதுக்)கவிதைக்கு ஏதாவது விதிமுறை/இலக்கணம் இருக்கா? இருக்குன்னு பார்த்தேன்..நல்ல பதிவு ஒண்ணுல..ஆனால் என்னென்னன்னு சொல்லல அவங்க!! எங்கன்னு மறந்து போச்சு!!
2. எனக்கு புதுக்கவிதை எழுதுவதுல வெறுப்பு இல்லீங்க..ஆனா பாருங்க, மேலே உள்ள அருணகிரிநாதர் பாட்டு மாதிரி பாட்ட எல்லாம் பாருங்க.. பக்கத்தில 'என் கவிதைகள்'ன்னு என்னோட பக்கத்த பாருங்க...ரெண்டையும் கவிதைன்னு சொல்லிக்க மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குதுங்க!! 'மகாபாரதத்தில் மங்காத்தா' மாதிரி நான் அவங்க காலத்துக்கு போனாலோ, அவங்க நம்ம காலத்துக்கு வந்தாலோ என்ன காரித் துப்புவாங்க..மேலும், இவ்வளவு 'இலக்கணம்' எல்லாம் படிச்சு கவிதை எழுதறவன் என்ன 'கேனயா'?. எனக்கு இத நெனச்சா ரொம்ப கவலை தாங்க..நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?
3. சரி, இந்த நிலைய உயர்த்த தமிழ் முனைவர்கள், அறிஞர்கள் 12ஆம் வகுப்பு வரை தமிழ் படிச்சவங்களுக்கு ஏதாவது 'Online'/Long Distance/On campus' மரபுகவிதைப்பயிற்சி, யாப்பிலக்கணப் பயிற்சி/ கல்வி எதாவது சொல்லித் தராங்களா? தெரியுமா!!
கவிதைக்கு எல்லாம் வகுப்பு வெக்கமுடியுமான்னு கேப்பீங்க..ஆனா பாருங்க. நம்ம மொழி அழியக்கூடாதுன்னா எதாவது செய்யணுங்க!! (சிவப்பதிகாரம் கிளைமாக்ஸ் மாதிரி சொல்லறேன்..ஹீ..ஹீ)
கோரைக்காலாழ்வான் கொடை, சொல்லிலக்கணம் மற்றும் விதண்டாவாதம்!
வாசகர்களே!! உண்மையா நான் எவ்வளோ பயந்தேன் தெரியுமா?? இலக்கணப் பதிவு எழுத ஆசைப்படுகிறோமே.. மக்கள் நம்மள 'வெண்ணை'ன்னு நினைச்சிடுவாங்களா? இல்ல..இன்னும் கடியாகி போயிடுவாங்களா? என்னென்னவோ யோசனை...இதையும் தாண்டி நம்ம மனசு என்ன சொல்லுதுன்னு பார்த்தா 'எழுது'ன்னு சொல்லுது. நீஙக ஒரு கண்ணோட்டமா இத Refresh செய்துக்கணும்னு தான் நான் விரும்பினேன். நம்ம ஆசைப்படுவது நடக்கும் போது எவ்வளோ சந்தோஷம் இருக்கு! நெஞ்சு வெடிக்கிற மாறி இருக்கும்..உயிர விட்டுடலாம்னு தோணும்.. ஆனா, அதுவே எதிர்பார்த்து, எதிர்பார்த்து எதுவுமே நடக்கவில்லைன்னா அது எவ்வளோ கொடுமைங்க..
சும்மா ஒரு கதை கேளுங்க!!
நான் சின்ன வயசுல இருக்கும் போது அம்மா ஆபீஸ்லேயிருந்து வந்து வாசல் 'கேட்'ட திறக்கும் சத்தம் கேட்கும்.'நாளைக்கு 'hero pen வாங்கி வரேன்னு சொன்னாங்களே.. வாங்கினாங்களோ இல்லையோ' என்ற ஆசையோடு, அம்மா கிட்ட மெதுவா பயந்து பயந்து செல்வேன் . தன் ‘சைக்கிள’ நிறுத்திட்டு களைப்பா உள்ள வந்த சில நிமிடங்களுல அம்மா பையை எட்டிப் பார்ப்பேன்.ஒண்ணும் தெரியாது . அத வெச்சு வாங்கலன்னு மனச தேத்திக்க மாட்டேன்.'வாங்கினா..குடுக்க மாட்டாளா ?? ஒருவேளை களைப்புல மறந்து போயிருக்கலாமே..கேக்கலாமா..வேண்டாமா ..கேட்டு இல்லன்னு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்குமே..அம்மா வேலைக்கு நடுவுல நிறைய விஷயம் மறந்துடுவா ..நிறைய வாங்கியும் கொடுத்திருக்காங்க.. இன்னிக்கு என்னவோ'- இத்தனை யோசனைக்கு நடுவுல ஒரு தைரியம் வரும். அப்புறம் கேட்பேன் . 'அய்யோ..மறந்துட்டேம்மா'- அந்த Sincereaன பதில கேட்ட பிறகும், என்னவோ கேட்கக்கூடாதத கேட்டது போல துக்கம் தொண்டைய அடைக்கும். ஒரு நிமிஷம் கோபம் வரும்..நீங்களெல்லாம் 'போன ஜென்மத்துல கோரைக்கால் ஆழ்வாரா பிறந்திருக்கணும்'ன்னு தோணும். இப்போ யோசிச்சா சிரிப்பா இருக்கு. அதே, வாங்கி வந்திருந்தாலோ சந்தோஷம் எல்லை மீறிடும்.. இதெல்லாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு எங்க தெரியும். பணம் கையில..வாசலிலேயே கடை..அப்படியும், அம்மா அப்பா தான் வாங்க வேண்டிய சாமானா... ஒரு ''போன்' போட்டு ஞாபகப் படுத்திடலாம்.. அப்படியும் வாங்கலன்னா 'வீட்டும் வந்த பிறகு வண்டி எடித்துட்டு லொங்கு லொங்குன்னு போய் வாங்க சொல்லலாம். அதெல்லாம் ஓண்ணும் நடக்காது அந்தக் காலத்துல..அத விடுங்க!
நீங்கயெல்லாம் 'போன ஜென்மத்துல கோரைக்கால் ஆழ்வாரா பிறந்திருக்கணும்'- இதை எங்க அம்மா அவங்க அம்மாவை சொல்லி சலித்துக்கொள்வது ..பிறகு நான் கத்திகிட்டேன்…அது என்னனு தெரிஞ்சுப்போமா..(நானும் ஒளவையார இழுக்காம ஒரு பதிவாவது போடனும்ன்னு பாக்கறேன்.. முடியலயே)
கோரைக்கால் ஆழ்வார்ன்னு (கோரைக்கால் என்பது அவன் ஊர்) ஒரு ப்ரபு இருந்தானாம். அவன(ர) ஒளவையார் புகழ்ந்து பாடினார். அது கேட்டு ‘ஒரு யானையை பரிசா தரேன்..நாளைக்கு வா 'ன்னானாம். அடுதத நாள் போனா யானை ரொம்ப அதிகம்ன்னு தோணிப்போய் ' குதிரை தரேன், நாளைக்கு வா'ன்னு சொன்னானாம். அடுத்த நாள் அது ‘எருமை’ ஆகி, அதுக்கு அடுத்த நாள் ‘எருதாகி’, அதுக்கும் அடுத்த நாள் 'ஒரு புடவை தரேன்னு சொல்லி', கடைசி நாளன்று ஒரு திரிதிரியாய்ப் போன புடவைய குடுத்தானாம். அத ஒளவையார் பாட்டாக்கி அவன் மானத்த வாங்கிட்டார்..இல்ல..இன்னும் வாங்கிட்டு இருக்கார்..ஹீ ஹீ..பாட்ட பாருங்க..நல்லா இருக்கும்
"கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,
முழப் புடவையாகி, திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து காலோய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை" - இந்த காலம் மாதிரி வசதி இல்லன்னாலும், நாங்க, வீட்டுல இதெல்லாம் நினைவு கூர்ந்து, சில சமயம் வேடிக்கையா சொல்லிக்காட்டி, வேண்டியத வாங்கிகிட்டோம்ல.. பாவம்..கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும் இப்படி சலிச்சிட்டு இருந்திருக்கேன்..சரி, நம்ம இலக்கணத்துக்குப் போவோமா!!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 4
சொல் இலக்கணம் பார்த்துகிட்டு இருக்கோமுங்க..அதுல தான் 15. எத்தனை பால், தினை, எண் வருதுன்னு சொல்றாங்க!!
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்ன்னு பால் வகை அஞ்சுன்னும் தெரியும்.
உயர்திணை, அஃறிணைன்னு இரண்டு திணை.
ஒருமை, பன்மைன்னு இரண்டு எண். அதான் எனக்கு தெரியுங்களே!!- என்ன அறிவாளி முத்துலட்சுமி மாதிரி அங்க சொல்றீங்களா? எனக்கு கேக்குது!!
16. இடம்னு ஒண்ணு இருக்குங்க- தன்மை, முன்னிலை, படர்க்கை.. அதாங்க, First person, second person, third personறது!!
17. உங்களுக்கு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ன்னா Subject, predicate, object ன்னு ஞாபகம் இருக்கா? இது சொல்லிலக்கணத்துல வராது.. ஆனா, ஞாபகப்படுத்திகிட்டு போனா நல்லது.
சா: ராமன் ராவணைக் கொன்றான்.
Subject Object Predicate
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
நம்ம நேத்து தொடங்கிய வினைச்சொல்ல இன்னிக்கு பீராஞ்சு பார்ப்போமா :)-
18. வினைமுற்று ன்னா?? (Finite verb): அதாவது, முழுதாக முடிஞ்ச வினை (action) அதுல 2 வகைங்க. 1. ஏவல் 2. வியங்கோள்.
1. முன்னால் நிற்பவரை ஏவுவது போல வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று. சா: பாடு, ஆடுவாய், உண்ணாதீர்.
2. ‘க, இய, இயல்’ எனற விகுதியுடன் வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்ற பொருட்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று சா: வாழ்க, ஒழிக, பொழிக, செய்க.
இன்னும் 20. தெரிநிலை வினை, குறிப்பு வினைன்னு ரெண்டு உண்டு.
தெரிநிலை வினை காலத்தைச் சரியாகக் காட்டும்.சா: ராமன் ராவணனைக் கொன்றான்.கொன்றான் - இறந்த காலம் . மேலும், கொன்றான் என்பது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம் என்ற ஐந்தையும் காட்டுகிறது.
அதுல 21. செயப்படுபொருள் (object) குன்றிய வினை (Intransitive Verb), செயப்படுபொருள் குன்றா வினை (Transitive verb) ன்னு ரெண்டு இருக்கு.
எதை, யாரை, எங்கு, எவற்றை -இந்த கேள்விக்கு எல்லாம் பதில் வரக்கூடிய வினை - செயப்படுபொருள் குன்றா வினை. சா: ராமன் ராவணனைக் கொன்றான்.
அந்த கேள்விக்கு பதிலில்லாம வருவது செயப்படுபொருள் குன்றிய வினை சா: கரும்பு இனித்தது. எதை, யாரைன்னு இங்க கேக்க முடியாது பாருங்க!!
காலத்தை குறிப்பாக மட்டுமே காட்டும் வினை குறிப்பு வினை சா: அவன் வல்லன். எப்போ வல்லவன் ? காலத்தை குறிப்பா தான் காட்டுது பாருங்க.
அது சரி, 22. வேற்றுமை(Case) ன்னா என்னங்க? நம்ம சொல்வோமே கழண்ட Case..அது இல்லீங்க!!
ஒற்றுமைக்கு எதிர்பதம்...சரி தான். அத, சான்றோட பார்ப்போமா!!
ராமன் கொன்றான்.
ராமனைக் கொன்றான். இங்க வந்த ஒரு' ஐ' ன்ற உருபு/எழுத்து பொருளை அப்படியே வேறுபடுத்தி காட்டிடுச்சு பாருங்க. அதைத்தாங்க, வேற்றுமை உருபுன்னு சொல்லுவாங்க. இதுல 8 எழுத்து இருக்கு. (சுலபமா ஞாபகம் வெச்சுக 'ஐ,ஆல்,கு,ன்,அது,கண், விளி' ன்னு சேர்த்து சொல்லுவோம்)
முதல் வேற்றுமை உருபு (Nominative case)– எழுவாய் (Subject)- இவைகளுடன் எந்த எழுத்தும் வராது. இருந்தாலும் வேற பொருள் தரும் சா: மக்கள் வந்தார். இங்க இது 'ஜனங்க' என்ற பொருளைத் தராது.
இரண்டாம் வேற்றுமை உருபு (Accusative case)- ‘ஐ’ சா: ராமனைக் கொன்றான்
மூன்றாம் வேற்றுமை உருபு (Instrumental case)-ஆல் சா: ராமனால் இறந்தான்
நான்காம் வேற்றுமை உருபு (Dative case)- கு சா: ராமனுக்குக் கொடு
ஐந்தாம் வேற்றுமை உருபு (Ablative case)- இன் சா: ராமனின் மனைவி
ஆறாம் வேற்றுமை உருபு (Genitive case)- அது சா: ராமனது பெண்
ஏழாம் வேற்றுமை உருபு (Locative case)- கண் சா: ராமனின் கண் உள்ளது (கண் - இடம் என்று பொருள்)
எட்டாம் வேற்றுமை உருபு (Vocative/ calling case)– விளி வேற்றுமை – மன்னா? இதில் ஆ என்பதை சேர்த்தவுடன் ‘அழைக்கிறோம்’ எனறு பொருள் மாறுகிறது பாருங்க..இதுக்கெல்லாம் அழகான ஆங்கில வார்த்தை குடுத்திருக்காங்க பாருங்க.. அத நிச்சயமா பாராட்டணுங்க..இன்னிக்கு இத்தோட நிறுத்துவோம் !!
தெரிந்தால் சொல்லுங்களேன் -4
1. விதண்டாவாதம்- இது தமிழ் வார்த்தையா? நேத்து, நான் யாரையோ திட்டினேன். அப்புறம், யோசிச்சேன். இதுக்கு என்ன பதஅர்த்தம்ன்னு. நான் கண்டுபிடித்த பதில்: விதண்டாவாதம்- வித்து+ அண்டா+வாதம்- வித்து (அறிஞர்+நெருங்கா+வாதம்). இது சரியா??அப்போ விவாதம் எப்படி வந்தது?
2. தமிழ் உணவுன்னு எடுத்துகிட்டா ஊர் வாரியா சாப்பாட்ட பிரிக்கலாம். மலைநாட்டு சாப்பாடு, செட்டிநாட்டு சாப்பாடு- அப்படி இப்படின்னு எதாவது அழகா பிரிச்சு, உணவு வகைகள் செய்முறைன்னு எதாவது இணையத்தளத்துல இருக்கா??
TUESDAY, JANUARY 08, 2008
பிள்ளைத்தமிழில் பௌதிகம், சொல்லிலக்கணம் மற்றும் எத்தனை ஒளவை?
சும்மா கேளுங்க ஒரு கதை !!
நீங்க புத்தகங்கள் வாங்க அளித்த முகவரிகளுக்கு ரொம்ப நன்றி! நிறைய இலக்கிய புத்தகங்கள் இணையத்துல கிடச்சாலும் அதற்கு உரையில்லாம/ அர்த்தம் புரியாம இருப்பதால 'பதவுரையோட கிடைக்கும் புத்தககங்கள' வாங்க முயற்சிக்கிறேன். என்ன செய்ய.. அந்த அளவுக்கு தான் எனக்கு அர்த்தம் புரியுது..ஹூம்…எங்க தமிழ் வாத்தியார் ஒரு 6 ஆம் வகுப்பு பிள்ளைக்கு கூட அவ்வளோ அழகா புரியும்படி இலக்கியம் சொல்லிக் கொடுப்பார். வாத்தியார்ன்னவுடனே அவர் சொன்ன கதை ஒண்ணு ஞாபகம் வருது. தமிழ் இலக்கியத்துலேயே எவ்வளோ பௌதிகம் Physics சொல்லியிருக்காங்கங்கிறதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னார். குமரகுருபரர் பற்றிய கதை அது..
குமரகுருபரர் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது மீனாட்சியம்மையோட அழக பார்த்து அவள குழந்தை வடிவில நினைச்சு 'பிள்ளைத்தமிழ்' வகையில பாட்டுக்கள் எழுதினாராம். அன்றிரவு, பாண்டியநாட்டு ராஜாவோட கனவுல அம்மனே வந்து, 'குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்’ன்னு சொல்லி ‘அதை என் கோவிலில அரங்கேற்று'ன்னு சொன்னாளாம். அதன்படி ராஜா குமரகுருபரர வேண்டிக் கொள்ள, குமரகுருபரரும் மீனட்சியம்மன் கோவிலில சபையைக் கூட்டி அரங்கேற்றினார். சபையில அர்ச்சகரின் குழ்ந்தையா அம்மனே வந்து அரசர் மடியில செல்லமா உட்கார்ந்து பாடல்கள கேட்டாளாம். அவர் பாடி முடித்தவுடன், அரசனின் கழுத்திலிருந்து மாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்துல போட்டுடு கோவிலிக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுட்டாங்கன்னு கதை போகுது..
இதுல பௌதிகம் எங்கன்னா,’மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்’ல குமரகுருபரர், 'ஊஞ்சல்' பகுதியில மீனாட்சியம்மை ஊஞ்சல் ஆடும் அழகை விவரிக்கும் பொழுது வருது. வேகமாக ஊஞ்சல் ஆடும் போது, அம்மனோட காதில் உள்ள கம்மல்/தொங்கட்டானும் அதிவேகமாக முன்னும் பின்னும் ஆடியதாம். அதுவும் தொங்கட்டான் ஊஞ்சலைவிட எவ்வளோ அதிகமா வேகமா ஆடியதுன்னு சொல்லியிருக்காராம். இதத்தான் பௌதிகத்துல, பெண்டுலத்தின் ஆட்டம் அதன் நீளத்தையும் பொருத்ததுன்னு சொல்லறோம் (Oscillation of the pendulum depends on its length).
'ஆமாம்ல'ன்னு 6 ஆம் வகுப்புல வியக்கும்படி கேட்டேன். அது இன்னிவரை மனசுல தங்கிடுச்சு!! ஆனா, என் தமிழறிவு எவ்வளவுன்னா, இணையத்தளத்துல ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ இருந்தும், ‘ஊஞ்சல்’ பருவத்தை கண்டெடுத்தும், 'இத சொல்வது எந்த பாட்டு?'ன்னு கண்டுபிடிக்கத் தெரியல...ஹூ..ம்..இதுல நான் இலக்கணம் பத்தி பேசறேன். விதி யார விட்டது:)-
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் – 3
எழுத்திலக்கணத்துல கொஞ்சம் பாக்கி இருக்கே!! அத முடிச்சுடுவோமா?!!
6.முதலெழுத்து, சார்பெழுத்து தவிர தமிழெழுத்த வேற எப்படி வகைப்படுத்தலாம்?
அ. ‘அவன், இது, அவ்வீடு’ அப்டீன்னு சுட்டிக் காட்ட உதவும் ‘அ, இ, உ’ சுட்டெழுத்துன்னு சொல்வோம். ‘அந்த, இந்த’ ன்னு திரிஞ்சா சுட்டுத்திரிபு.
ஆ. ‘எ,யா,ஆ, ஓ,ஏ’ என்பதைப் பயன்படுத்தி கேள்வி கேட்பதால அது வினாஎழுத்து. சா: எது?. யார்?, அறிஞனா?, யானோ?,ஏன்?, இவனே செய்தான்?
இ. 'அதுவா?!' ன்னு சுட்டிக்கேட்டா அது சுட்டுவினா.
ஈ. ஒரே இனமாக அ-ஆ; இ-ஈ, உ-ஊ - இப்படி வருவது இனவெழுத்து. மெய்யெழுத்துல க்-ங்; ச்,ஞ், ட்-ண்..இது போல இனவெழுத்தா வகைப்படுத்தியிருக்காங்க
உ. செய்யுளில் ஒரு எழுத்துக்கு பதில் இன்னொரு எழுத்து வந்து பொருள் மாறலன்னா அதுக்கு பேரு 'போலி'. சா: 1. 'மயல்'லுக்கு பதிலா 'மையல்'ன்னு சொன்னா அதுக்கு போலி.2. அறம்-அறன் 3. அரசு-அரைசு
இதெல்லாம் நமக்கு முன்பே தெரிஞ்சது தான். எழுத்திலக்கணம் அவ்ளோ தாங்கோ!!
சொல் இலக்கணம்
நம்ம சொல் இலக்கணத்துக்கு வந்துட்டோம்.
7. சொல் (Etymololgy) எத்தனை வகைங்க?
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
8. 'பெயர்ச்சொல்'ன்னா? பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்(Noun).
இது 6 வகைங்க.பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினை/உறுப்புப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.சா: ப்ரியா(பொருள்), சென்னை(இடம்), காலை(காலம்), கால்(சினை), இனிப்பு(பண்பு), கெடுதல்(தொழில்)
9. 'வினைச்சொல்'ன்னா? ஒரு பொருளின் வினையை(action)க் குறிக்கும் சொல் வினைச்சொல்(Verb). சா: கொடுத்தான், வளரும், நகர்கின்றன
10. இடைச்சொல்ன்னா? தனித்து இயங்காமல் பெயருடனோ,வினையுடனோ இடமாகக் கொண்டு வரும் சொல் இடைச்சொல்(Particles).சா: அவனைக் கண்டேன்- ஐ; சென்றானா? - ஆ; திருவாரூரின்-இன்
11. உரிச்சொல்ன்னா? தனித்து பொருள்படாமல், பெயர் வினைகளின் குணத்தை உணர்த்த வரும் சொல் உரிச்சொல் (Qualifying words).சா: உறுபுகழ் (உறு-மிகுதி); சாலப் பேசினான் (சால- மிகுதி)
அது சரி, அப்போ 12. பெயரெச்சம், வினையெச்சம்னு சொல்றாங்களே அது என்ன?
'முற்று'ன்னா- முழுமையான வருவது. சா: படித்தான், நடந்தான்
'எச்சம்'ன்னா - முழுமையா பொருள் இல்லாம வருவது. சா: படித்த, நல்ல,ஓடி,மெல்ல
இப்போ இந்த 'எச்ச'த்துக்குப் பின்னாடி பெயர்ச்சொல் வந்தா பெயரெச்சம்.
சா: படித்த ராமன், விடிந்த காலை, நல்ல வீடு
எச்சத்துக்கு பின்னாடி வினைச்சொல் வந்தா வினையெச்சம்
சா: ஓடி வந்தான், மெல்ல நடந்தான்.
13. இதுல 'ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்/வினையெச்சம்'ன்னா என்னன்னு தோழர்கள் ஏதேதோ கேட்டு பயமுறுத்துவாங்களே!! அது என்ன தெரியுமா?
சா: உண்ணா குதிரை
பெயரெச்சம்- உண்ட குதிரை
எதிர்மறை(Opposite)-உண்ணாத குதிரை
ஈறு கெட்ட - கடைசி எழுத்து போன
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்- உண்ணா குதிரை
அதே தாங்க!! வினையெச்சமா வந்தா -உண்ணா வந்தான்.
14. அப்போ 'வினையாலணையும் பெயர்' ன்னா என்ன? எங்கயோ கேட்ட மாறி இருக்கா!!
ஒரு சொல் அதனோட வினையை (actiona) குறிக்காம வினை செய்தவனைக் குறித்தால் (அ) வேற்றுமை உருபை கூட சேர்த்துகிட்டு வந்தால் அதற்குப் பெயர் வினையாலணையும் பெயர்.சா: ஆடியவள், பாடியவளுக்கு. ஆடி- ஆட்டத்த குறிக்குது. ஆடியவள் – அந்த பெண்ணைக் குறிக்குது. சரி..இத்தோட இப்போ நிறுத்துவோம்
தெரிந்தால் சொல்லுங்களேன் - 3
அந்த காலத்துல ரெண்டு ஒளவையார் இருந்தாங்களாமே? ஒருத்தங்க அதியமான் காலம் இன்னொருத்தங்க. கம்பர் காலமாமே! அப்படியா? எங்கயோ படிச்சேன்!! ஒளவையார் அதியமான் முதல் பொய்யாமொழிப்புலவர் காலம் வரை இருந்தாராமே!! எந்த ஒளவை?? அவர் வாழ்ந்த காலம் எது?? ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க..இன்னொரு கேள்வி..திருக்குறளை எதோ ஒரு காரணத்துக்காக (திருவள்ளுவர் கீழ் ஜாதி..அது மாறி எதோ silly யான காரணத்தால்) தமிழ்ச்சங்கம் எற்றுக் கொள்ள வில்லை. ஆனால், ஒளவையார் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நின்று "சங்கப்பலகையே, நீ இதை ஏற்றுக்கொள்"ன்னு பாட்டுபாடி அதை ஏற்றுக்கொள்ள வச்சாங்களாமே..இதெல்லாம் காது வழியா வந்த செய்தி!! உண்மைச் செய்தி அதுவா?..உங்களுக்குத் தெரியுமா??
MONDAY, JANUARY 07, 2008
இரட்டைத் தாழ்ப்பாள், எழுத்திலக்கணம் மற்றும் புத்தகம் எங்கு கிடைக்கும்?
மக்களே!! என்ன.. தமிழ் இலக்கணம் பேசி கொடுமை படுத்தறேன்னு நினைக்கறீங்களா?? “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாப்பாள்" கதையா இன்னும் இலக்கணத்துல வெறுப்பு வராம இருந்தா சரி..அது என்ன கதைன்னு கேக்கறீங்களா..ஏற்கனவே கடியில இருக்கும் ஒரு விஷயத்தை இன்னும் கடியேத்தற மாறி சொல்லி மொத்தமா ஆர்வத்த குறைப்பத தான் சொன்னேன். இது வழக்குல வந்த கதைய கேளுங்க!
குலோத்துங்க சோழனின் மனைவியான பாண்டியநாட்டு ராஜகுமாரி (பெயர் தெரியவில்லை) தன் குருவான புகழேந்திப் புலவரையும் தன்னுடன் சோழநாட்டுக்கு அழைத்து வந்திருந்தார். குலோத்துங்கனின் குருவான ஒட்டக்கூத்தர் ஒரு காரணமுமின்றி புகழேந்திப் புலவரை சிறையிலடைத்தார். அத கேள்விப்பட்ட ராணி, கோபத்துடன் அந்தப்புரத்தின் அறைக்குச் சென்று தாழ்ப்பாள் ஒன்றைப் போட்டு உள்ளிருந்தார். அக்காலத்தில, ராணி கோபம் கொண்டால், ராஜா, ஒரு புலவரை அழைத்து ராணியைப் பற்றி புகழ்ந்து பாடச்சொல்லி கோபத்தைக் குறைப்பது வழக்கம். அதன்வழியே ராஜா ஒட்டக்கூத்தரைப் வெளிநின்று பாடச் சொல்ல ராணியோ தனக்குள்ள கோபத்தின் மிகுதியால் இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டாளாம். இத கவிதையோடஅழகா இங்க சொல்லி இருக்காங்க. Right Click செய்து பாருங்க! மறுமொழிகளைப் பார்த்தா நீங்க ஆர்வத்தோட இருக்கிற மாதிரி தான் தெரியுது..என்னவா இருந்தாலும் ‘இலக்கணத்தைப் பத்தி பேசணும்’ன்னு தீர்மானமா தான் இருக்கேன் நானும் :)-
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் -2
முதலெழுத்து, மாத்திரை எல்லாம் பார்த்தோம். 5. சார்பெழுத்து (Dependent letters) எத்தனைங்க?
சார்பெழுத்து 10 வகை:
1. உயிர்மெய் (Vowel-Consonant): 12 உயிர் * 18 மெய் = 216 எழுத்துகள் ( க முதல்..கா கி கீ... னௌ வரை)
2. ஆய்தம்(Guttaral): ஃ சா: அஃது, எஃது
3. உயிரளபெடை(vowel prolongation):
அது என்ன?? அளபெடையா?? அப்டீன்னா? செய்யுளில்(Poetry) சில இடத்துல ஒசையளவு குறைந்தாலோ /இனிமையான ஓசைக்காகவோ/சரியான பொருளுக்காகவோ ஒரு எழுத்து நீண்டு ஒலிப்பது ‘அளபெடை’ ன்னு சொல்லுவாங்க. அளபு+ எடை- நீண்ட அளவு எடுத்தல்.
உயிரளபெடை(உயிர்+அளபெடை): உயிர்நெடில் எழுத்துகள் (ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, ஐ, ஒள) இன்னும் நீண்டு ஒலிக்க அதன் குறில் வடிவத்தை சேர்த்துகிட்டா அது உயிரளபெடை. சா: கெடுப்பதூஉம், உரநசைஇ, ஈஇகை.
கெடுப்பதூஉம்- இங்க இனிமையா இருக்க 'த்+ ஊ' கூட 'உ' வ சேர்த்து சொல்லறோம். இது தாங்க ' இன்னிசை அளபெடை'.. நம்ம இத சினிமா பாட்டுல கேட்டு இருக்கோமே
4. ஒற்றளபெடை(Consonant Prolongation): ங், ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ இவை அனைத்தும் 1/2 மாத்திரையிலிருந்து நீண்டு 1 மாத்திரைக்கு வந்தா அது ஒற்றளபெடை.
சா: அரங்ங்கம், மரம்ம்
5. குற்றியலுகரம் (Shorterned உ): சா: காசு-நம்ம கா'சு' kaas(u) ன்னு தானே சொல்வோம். காசூ(kaasU)ன்னு முழுக்க சொல்லமாட்டோம்ல. அதுதான் இது.
‘வல்லினமெய் (கு,சு, டு,து, பு, று) + உ’ வில் உள்ள 'உ', தனக்குரிய 1 மாத்திரை அளவு இல்லாம 1/2 மாத்திரையா குறைந்து ஒலிச்சா அது குற்றியலுகரம் - குறிய+இயல்+'உ'கரம்.
சா: காசு,வரகு, பாக்கு,சங்கு
6 குற்றியலிகரம் (Shortened இ): குற்றியலுகரத்துக்கு பின்னாடி 'ய' வந்தால், 'உ' என்பது ' இ' யாக திரிந்து 1/2 மாத்திரையா குறைஞ்சு ஒலிக்கும். இது தான் குற்று+இயல்+இகரம்.
சா: நாடு (ட்+உ)+யாது = நாடியாது 'டி'ய கவனிங்க
குழலினிது+ யாழினிது = குழலினிதி யாழினிது – ‘தி’ய கவனிங்க!!
7. ஐகாரக்குறுக்கம் (Shortened ஐ): 'ஐ' யோட ஓசை குறைஞ்சு வந்தா ஐகாரக்குறுக்கம்.
சா: ஐந்து, தலைவன், வலை. இதுல எல்லாம் ஐ 2 மாத்திரையிலிருந்து குறைஞ்சு வருது பாருங்க
8. ஒளகாரக்குறுக்கம்(Shortened ஓள): 'ஒள' ஓசை குறைஞ்சு வந்தா ஒளகாரக்குறுக்கம்.
சா: ஒளவை, கௌதாரி. இதுல எல்லாம் ஒள 2 மாத்திரையிலிருந்து குறைஞ்சு வரும்
9. மகரக்குறுக்கம்(Shortened ம்): 'ன'கர, 'ண' கரத்திற்கு பின்னாடி 'ம்'கரம் வந்தா 'ம்' ஓசை குறைஞ்சு 1/2 மாத்திரையிலிருந்து 1/4 மாத்திரையா வருவது மகரக்குறுக்கம்.
சா: போன்ம் (போலும் எனபதைக் குறிக்கும்) என்ற சொல்லில் 'ம்' ஒலி மெலிதாகத் தான் கேட்கும்
10.ஆய்தக்குறுக்கம்(Shortened ஃ): குறில் + ல்/ள் + 'த'கரம் வந்தால் = ஆய்த எழுத்து வரும். அதுவும் கம்மி ஒலியோட வரும்.
சா: அல் + திணை -அஃறினை. இதுல் 'அல்' நிலைமொழி, அதாவது ஏற்கனவே இருப்பது. திணை - வருமொழி, அதாவது வந்து சேருவது. அல்+ திணை = 'அ'- குறில் + ல் + 'தி' வருதா!! இப்போ அஃறினையா மாறுவதோடு இல்லாம குறுகிய ஓசையோடு வருதா. அதாங்க!!! சரி, அடுத்த பகுதியை நாளைக்கு பார்க்கலாம்
தெரிந்தால் சொல்லுங்கள் -2
தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னையில, சங்க கால இலக்கியம்/ஐப்பெரும்காப்பியம் போன்ற நூல்கள் /சரித்திர புதினம் எங்கெங்க(க்டைகள்) கிடைக்கும் தெரியுமா? நான் ஏதாவது புத்தகக் கண்காட்சி வந்த போது மட்டுமே புத்தகம் வாங்கியிருக்கேன். கடைகளின் முகவரிகள் இருந்தால் கொடுங்களேன்?!!!
SUNDAY, JANUARY 06, 2008
அதியமான் படைக்கலம், எழுத்திலக்கணம் மற்றும் யாரோட பாட்டு ?
வாசகர்களே!! எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே குழந்தை. சின்ன வயசுல பாட்டி, தாத்தா, மாமா, சித்தி இவங்க எல்லோருடனும் வளர்ந்தேன். குடும்பத்துல எல்லாருமே 'தமிழ் பழமொழி, தமிழ் வார்த்தையை வச்சு விளையாடுதல்'ன்னு ரொம்ப கேலியும், கும்மாள்முமா இருப்பாங்க. புராண கால சம்பவங்கள சொல்லி 'இத யார் சொன்னது?', 'அது எப்படி நடந்தது?' ன்னு பேச்சு நடக்கும். எவ்வளவு கதை சொல்லியிருப்பாங்கன்னு கணக்கே கிடையாது. அதோட பழமொழி சொல்லி அவங்க நம்மள திட்டுவதும், நாங்க எதிர்த்து பேச புராண கதையை கிளர, அவங்க கோபப்பட, அங்க நம்மையும் அறியாம எவ்வளோ தமிழ் சரித்திரம் கத்துகிட்டு இருக்கோம்னு நினைச்சா அவ்ளோ பூரிப்பா இருக்கு. உதாரணத்துக்கு ஒரு கதை கேளுங்க!
அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் குப்பையாய் கிடக்கும் அறையைப் பார்த்து "என்ன.. இப்படி எங்க பார்த்தாலும் புத்தகம், பேனா, பைன்னு இரைச்சு வச்சுருக்கியே...பக்கத்து வீட்டு உஷாவை பாரு. எவ்வளவு அழகா கலையாம மேஜயில வச்சுருக்கா" ன்னு திட்ட உடனுக்குடன் நான்/ எங்க வீட்டு குழந்தைங்க சொல்லும் பதில் " என் சாமான் எல்லாம் அதியமான் படைக்கலம்..அவளுது என்னவோ தொண்டைமான் படைக்கலம். உனக்கு நாங்க தொண்டைமானா இருந்தா போதுமா?!"- இந்த வரி சொல்லி கேட்டிருக்கீங்களா?? இதுக்கு பின்னாடி ஒரு குட்டி கதையே இருக்குங்க.
ஒரு முறை அதியமான் (ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன்) இன்னொரு மன்னன் தொண்டைமானுடன் போர் புரிய வேண்டிய நிலை வந்தது. அதியமான் பலசாலியானாலும் மற்ற உயிர் சேதத்தை எண்ணி தொண்டைமானோடு போர் புரிய விரும்பவில்லை. ஆனால் தொண்டைமான் என்னவோ போரை விரும்பினான். அதனால் அதியமான் ஒளவையாரை தூது போய் அவன் மனத்தை மாற்ற வேண்டினான். அதற்கிணங்கி ஒளவையாறும் தொண்டைமானைச் சந்தித்த போது அவனிடம் அவனை ஆயுதம் வைக்கும் இடத்திற்கு அழைத்து செல்லக் கேட்டார்.வாளும், கேடயங்களும் அதனிடங்களில் ஒரு தூசு படாமல் மின்னிக் கொண்டு இருந்ததைப் பார்த்து தந்திரமாக அவனிடம் " தொண்டைமானே, உன்னிடம் ஆயுதங்கள் மிக அழகாக, கூர்மையாக உள்ளது. ஆனால் அதியாமானோ அதை தினமும் எடுத்து பயிற்சி செய்வதால் மொக்கையக்கி அங்கும் இங்குமாய் போட்டிருக்கான்..பாவம்" என்று கூறினாள். அவள் பேச்சின் உள் அர்த்ததை, அதியமானின் பராகிரமத்தை அப்பொழுது தொண்டைமான் புரிந்து கொண்டு போர் எண்ணத்தை கைவிட்டதாக வரலாறு. இத நாங்க எப்படி உபயோகப்படுத்தினோம் பாருங்க!!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 1
குறிப்பு: இலக்கணத்தில் ஆர்வம் வளர்க்க மற்றும் மக்கள் சிறிதேனும் இலக்கணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டுமே இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில் முறையில் அமையப்பட்டுள்ள இவற்றில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்/திருத்தவும். விரிவாகக் கற்க தமிழாசிரியர்களை அணுகவும்.
சரி, முடிஞ்சவரை ரம்பம் போடாம சொல்ல முயற்சி செய்யறேன்.
தமிழ் இலக்கணம்!! 1. முதல்ல, உங்களுக்கு தெரிந்த ரெண்டு தமிழ் இலக்கண புத்தகங்கள மற்றும் யார் எழுதினாங்கனு நினைவு கூர்ங்க பாப்போம்? State Board, Central Boardnnu சொல்லக்கூடாது ..ஹி..ஹீ
அ. தொல்காப்பியம் - தொல்காப்பியர் ஆ. நன்னூல் - பவணந்தி முனிவர் (மூணுசுழி "ண" தாங்க). இங்கே இன்னும் சில.
ஆமா...ம் 2. இலக்கணம் எத்தனை வகை, என்னென்ன தெரியுமா?
ஐந்து வகைங்க. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
அ. எழுத்து (Orthography-letters): இதுல பாருங்க..எழுத்து தெரியாம நீங்க இத படிக்கவே முடியாது. அதுனால இந்த பகுதில சிலவற்றை நம்ம கட
கடன்னு பார்ப்போம்.
ஆ.சொல் (Etymology- words): இதுவும் நமக்கு தெரியும்.. ஆனா, எதுக்கு பேறு என்னன்னுதாங்க தெரியாது. இத தெரிஞ்சுகிட்டாலே சராசரி தமிழ் இலக்கணம் தெரிஞ்சவராயிடலாம். இந்த 7 நாளுல இத நம்ம சுலபமா கத்துக முயற்சி செய்யலாம்.
இ.பொருள் (Syntax-Matter): (இது என்னனு எனக்கு ரொம்ப நாள் சந்தேகம்) இந்த பகுதியில, 'வரிகளில் உள்ள வார்த்தை பிரயோகம், வரிகளின் அமைப்பு, நடை, விதிமுறை, ஆராய்வு' என்பதைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்காங்க. இந்த பகுதி நிறைய மொழிகளுல கிடையாதாம். மேலும், இவ்விலக்கணப்பகுதி சித்தாந்தத்துடன் (Philosophy) பின்னிப்பிணைந்து இருக்காம் (Lazarus அவர்கள் சொல்லியிருக்கார்).
ஈ.யாப்பு (Prosody): இது செய்யுளின் உறுப்பு (parts) மற்றும் வகை (Category) பற்றி சொல்வது (Versification of prosody and categories of poetry). அதாவது, சொல்(Word), நடை(Style) மற்றும் பொருளழகிற்கு(Meaning) ஏற்ப, ஓசை நலத்தைக் கொண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இலக்கணம். இத தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்.
உ.அணி (Rhetoric): வரிகளின் நடையை அலங்கரிப்பதைப் பற்றி சொல்வது. இது பேச்சில இருந்தா நம்ம பேசுவத எல்லோரும் இன்பமா கேப்பாங்க. ஒரு அழ்கு இருக்கும். யாப்பு, அணியை சேர்த்து நம்ம கடைசி நாளில் பார்ப்போம்.
முதல்ல.. எழுத்து இலக்கணம் பார்ப்போமா! 3. எழுத்துல என்னென்ன எல்லாம் அடங்குதுங்க?
அ) வடிவம்: ஒலி வடிவம் - Oral form. வரி வடிவம் -Written form
ஆ) வகை: முதலெழுத்து, சார்பெழுத்து
அ. முதலெழுத்து - Primary Letters
நமக்குதான் தெரியுமே!! 'முதலெழுத்து'ன்னா உயிர் எழுத்து (Vowels) - 12 + மெய்யெழுத்து (Consonants) - 18 = 30 ன்னு. உயிரெழுத்துகள குறில் (அ, இ,உ,எ,ஒ) , நெடில் (ஆ,ஈ, ஊ,ஏ, ஓ) இணை எழுத்து (ஒள,ஐ) ன்னு ஓசைக்கு ஏற்றார் போல பிரிக்கலாம். மெய்யெழுத்துகள வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ர்), மெல்லினம் (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) மற்றும் இடையினம் (ய்,ற்,ல்,வ்,ழ,ள்) ன்னு ஓசையோட தன்மைக்கேற்ப பிரிக்கலாம்.
ஆ. சார்பெழுத்து - Secondary/Dependent Letters. இத அடுத்த வாரம் பார்க்கலாம்
4. அது சரி... இந்த குறுகிய ஓசை, நெடிய ஓசைன்னு எல்லாம் ஏன் பிரிக்கணும்?
எழுத்தோட நீளத்துக்கு எல்லாம் அளவுன்னு (measure/meter) ஒண்ணு உண்டு. அதுக்கு பேரு தாங்க " மாத்திரை" (மருந்து மாத்திரை இல்ல).
ஒரு மாத்திரை = கண் இமைக்கும் நேரம்/கை சொடுக்கும் நேரம்.
குறில் எல்லாம் 1 மாத்திரை. நெடில்/ இணை எல்லாம் 2 மாத்திரை. ஆய்தம், மெய் எழுத்துக்கள் எல்லாம் 1/2 மாத்திரை. இந்த மாத்திரை அளவு எதுக்குன்னா, கவிதை எழுதும் போது ஒரு ஒலி, சந்தம், நடை இதெல்லாம் பாட்டு முழுக்க ஒரே மாதிரி இருக்க வேண்டாமா..அத சரியா கட்டுக்கோப்பா வைக்கதானாம்.
தெரிந்தால் சொல்லுங்கள் - 1
மக்களே !! எனக்கு ஒரு சந்தேகம்..
"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" -இந்த வரிகள் ஒளவையாருடைது என நான் நினைத்திருந்தேன். ஒரு தோழி இதற்கு ஆதாரம் கேட்க, இன்று வரை கிடைக்கவில்லை. இது யாருடைய வரிகள்?
வாங்க..வாங்க..வாங்க!!
வாங்க..வாங்க..வாங்க!!
அடிக்கடி வலைத்தளங்களுக்குப் போகமுடியாமல், சில வாரங்களாகவே பரீட்சை, ஆராய்ச்சி, வர்ணம் பூசுதல்னு மூழ்கி இருந்தேனா! போனவாரம் தான் தமிழ்மணத்துல கூப்பிட்டது 'வரப்போகும் வாரம்'ன்னு ஞானோதயம் வந்தது. தமிழ்மணம் நிர்வாகியின் ‘ஞாபகப்படுத்தும் மின்னஞ்சல்’ என்னவோ "அடுத்த வாரம் உங்க வீட்டு 'நவராத்திரி கொலு'வுக்கு நிறைய பேர் வரப்போறாங்க" ன்னு யாரோ 'போன்' பண்ணி 'ஆபீஸ் போகும் அம்மா' கிட்ட சொன்ன மாறி இருந்தது. முன் வாரமே பரபரப்பாகும் அம்மா மாதிரி நானும் என் 7 நாள் கொலுவை எப்படி வைக்கறதுன்னு ஒரே கவலை. ஆனா, எனக்கும் ஆபீஸ் (Research) என்னமோ இருந்தது.
வரப்போகும் மக்கள், முன்பு பார்த்த வீட்டயெல்லாம் (முந்தய நட்சத்திரங்கள் பதிவுகள) ஒரு எட்டு 'குடு குடு'ன்னு பார்த்துடு வந்தேன். மனசெல்லாம் கவலை.. ஏன்னா, என்கிட்ட என்னவோ கொஞ்சமா தான் பொம்மைகள் இருக்கு. என் தமிழறிவ பத்தி தாங்க சொல்றேன்.போதாக்குறைக்கு நான் வேற எங்க வீட்டுக்கு 'கொலு அகம்' ன்னு பேரு வெக்கற மாதிரி, 'தமிழ்க்கல்வி'ன்னு பெரிசா பேரு வேற வெச்சிருக்கேன். இதை தொடங்கும் போது யாருக்கு தெரியும், இப்படி பெரிய மனுஷங்க நீங்க எல்லாம் வரீங்கன்னு!
வாசகர்களே! 'தமிழ்க்கல்வி' ன்ற தலைப்ப பார்த்து ரொம்ப அதிகமா எதிர்பார்த்துடாதீங்க. தமிழார்வம் வளர்க்க தான் நான் முயற்சி செய்வேனே தவிர, தமிழ்மணத்துல உள்ள நிறைய தமிழறிஞர்களுக்கு இங்க தமிழ்க்கல்வி ஒண்ணும் புதுசா/ பெரிசா இல்லீங்க. நேரம் கிடக்கும் போது எல்லாம் நான் படிக்கும் சிலவற்றை வலைத்தளத்துக்கு ஏத்துவேங்க.. அவ்ளோ தான்!!
ஒரு வழியா அம்மாவாசை வந்துடுச்சு !! நானும் சுண்டல் சாமான் எல்லாம் எடுத்து ஊற போட்டுகிட்டே பேசறேன். கல்வி.. பாடம்..அப்படீன்னு எல்லாம் ரொம்ப யோசிக்காம ஒரு வாரம் தினம் வாங்க..சுமாரா சமைக்க முயற்சி பண்றேன்.. வந்து சந்தோஷமா சுண்டல் சாப்பிடுங்க. வீட்டுக்கு வரீங்க.. வரவங்க ' கொலு'வ மட்டுமா பாப்பீங்க.. 'முந்தய பதிவுகள்'ன்ற என் முழு வீட்டை நல்லா சுத்தி பாருங்க. நிறையா இடம் குப்பையா கிடந்தா கண்டுகாதீங்க. மாடில உள்ள எங்க பாட்டி வீட்டுலயும், பக்கத்துல உள்ள எங்க அத்தை வீட்டுலயும் எங்க சமையல் தான். அதுவும் எங்க வீடு தாங்க.. இந்த வீட்டுக்கு அப்புறம் அங்கயும் போய் கைய நனையுங்க..என் மத்த வலைத்தளங்கள தான் சொல்றேங்க..எதாவது ஒரு வீட்டுலயாவது உங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு கிடைக்கும்னு நம்பறேன். சரி..இத்தனையும் வாசலில வெச்சே சொல்லி இருக்க வேண்டாம்.. இருந்தாலும்... அத விடுங்க...
வாங்க!! வாங்க!! வாங்க!! எப்படி!!!!! வீட்டுக்கு வரவங்கள கூப்பிடற மாறி கூப்பிட்டேனா !! :)-
மக்களே!! அண்மையில் திருப்பாவையில் ஒவ்வொரு பாடலையும் கற்று அதனை இணையத்தில் ஏற்றிக் கொண்டிருந்தேன். படிப்பின் காரணமாக தினமொரு பாடல் கற்க இயலவில்லை. பாதியில் நின்று கொண்டிருக்கின்றது. கவிதை மூலம் தமிழ் கற்பதை நோக்கமாகக் கொண்ட இத்தளத்திற்கு விருந்தாளிகள் தாங்கள் வந்திருப்பதனால், இந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் தமிழ்க்கல்வியைத் தழுவி சில விஷயங்களை சின்ன பொட்டலங்களாகக் கட்டி ஒரு பதிவாய் இணையத்திலிட எண்ணியுள்ளேன்.
என்னென்ன பொட்டலங்களென பார்ப்போமா!!
1. சும்மா கதை கேளுங்க: ‘சிந்து பைரவி’ ஜனகராஜ் மாறி என்னைப் பேச விடவில்லைன்னா என் மண்டை சுழன்று, வெடிச்சுடும். அதனால முதல்ல நான் கொஞ்சம் கதை பேசறேன்.
2. இலக்கணம்-ஒரு கண்ணோட்டம்: நாம அனைவரும் பள்ளியில மனப்பாடம் செய்து இலக்கணம் பயின்றிருப்போம். ஆனா, நிறைய பேருக்கு இலக்கணத்த பார்த்தா ஒரு பயம். எனக்கு எளிய நடையில் அடிப்படையான இலக்கணத்தை சொல்லித்தர ரொம்ப ஆசை. "அதுக்கு நாங்க தான் கிடைச்சோமா"ன்னு கேக்காதீங்க!! ஆமாங்க..உண்மை அது தாங்க.. சும்மா படிச்சு பாருங்க!! உங்க குழந்தைகளுக்கு சொல்லித்தர உதவுமே!! உபயோகமா இருந்தால் நிச்சயமா சொல்லுங்க. குறையிருந்தாலும் சொல்லுங்க..நான் திருத்திக் கொள்கிறேன். கொடுமையா இருந்தாலும் சொல்லுங்க. நான் நிறுத்திக் கொள்கிறேன் :)-
3. தெரிந்தால் சொல்லுங்கள்: எனக்கு நிறைய தமிழ் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கு. இவ்வளவு பேரை இங்கு பார்க்கும் போது விடை கேட்டு தெரிந்து கொள்ள ஆசை..பதில் சொல்லிட்டு போங்க..உங்களில் யாருக்காவது கேள்வி இருந்தாலும் சொல்லுங்க. நான் சேர்த்து பதிவு செய்யறேன்.
ஏழு நாளைக்குப் பிறகு சாவகாசமாய் திருப்பாவையைத் தொடரலாம்ன்னு
நினைக்கிறேன். என்ன.. 'வணக்கம் தமிழகம்' பார்க்கிற மாறி ஒரு எண்ணம் எனக்கே லேசா வருது... உங்களுக்கு எப்படி?? மறுமொழியீடுப் பகுதிக்கு வாங்
Keine Kommentare:
Kommentar veröffentlichen